“இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது…” என்று விஜய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மனுவின் மீதான தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “சினிமா நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது” என்று கடுமையாக சாடியதோடு, நடிகர் விஜய்யின் வரி விலக்கு மனுவை தள்ளுபடி செய்தார்.

அதோடு, விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, “அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என்றும் உத்தவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, நடிகர் விஜய் கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

“தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றும், “தன் மீது தனி நீதிபதி தெரிவித்த விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றும் விஜய் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்து இருந்தார்.

விஜய் மீதான விமர்சனங்களை நீக்குவது தொடர்பான விசாரணை நான்கு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பில் ஆஜரனா வழக்கறிஞர் “காரை இறக்குமதி செய்ததற்கான வரிக்கான நிலுவை வரித் தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செலுத்திவிட்டோம்.

வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை, நுழைவு வரி செலுத்தவில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக நீதிபதி கூறியதும் தேவையற்ற கருத்துக்கள்.

கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கியிருக்கும் நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. தன்னை தேச விரோதியாக கூறுவதும் தவறு.

தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக இது போன்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கபட்டது.